தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா… ரேண்டம் டெஸ்ட் செய்வது சரியா? சுகாதாரத்துறை விளக்கம்

கோவிட் பிஎஃப் 7 என்னும் கொரோனாவின் புதிய திரிபு சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தொற்று இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ரேண்டம் பரிசோதனை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா

அதென்ன ரேண்டம் டெஸ்ட்?

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரையும் பரிசோதிக்காமல், அவர்களில் சிலரிடம் மட்டும் பரிசோதனை செய்வதே, ரேண்டம் டெஸ்ட்டிங் எனப்படுகிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழக அரசும் சர்வதேச விமான நிலையங்களில் `ரேண்டம் டெஸ்ட்டிங்’ முறையைத் தொடங்கியுள்ளது. கோவிட் -19 தொற்றின் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள், படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனை தயார்நிலையில் வைத்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இத்தகைய பல்வேறு முறைகளை அரசு பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில், இந்த ரேண்டம் டெஸ்ட்டிங் செய்யப்பட்டு வருகிறது. முதலில் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு புதியவகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 27-ம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த 6 வயது மகள், தாய் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று துபாயிலிருந்து சென்னைக்கு வந்த புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரேண்டம் டெஸ்ட்டிங் செய்வதால் சிலருக்கு தொற்று இருப்பது தெரியாமல் போய்விடும். அதனால், புதிய வகை கோவிட் தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக, பொதுமக்கள் கருதுகின்றனர்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்

தொற்று பரவத் தொடங்கி இருக்கும் இந்தச் சூழலில், இது போன்ற ரேண்டம் டெஸ்ட்டிங் முறையைப் பின்பற்றுவது சரியானதா என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டோம்… “அனைவரும் கொரோனா பரிசோதனை செய்வதை விரும்ப மாட்டார்கள், எனவே, ‌ ரேண்டம் டெஸ்ட்டிங் என்பதுதான் இப்போதைய சூழ்நிலைக்கு சாத்தியம். இதுவே மத்திய அரசின் பரிந்துரை. ரேண்டம் டெஸ்ட்டிங் செய்யும் போது கொரோனா தொற்று உறுதியானால் அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களைக் கண்காணிக்கும். இந்த கொரோனா தொற்றுக்காக அரசு அறிமுகம் செய்யும் இன்ட்ராநேசல் தடுப்பு மருந்தை யாரெல்லாம் செலுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த விவரங்களை, சுகாதாரத்துறை அறிவிப்பின்படி பின்பற்ற வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.