சென்னை: “தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.100 கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காத நிலையில், விவசாயிகளை ஏமாற்றி வேறொரு நிறுவனத்திற்கு ஆலையைக் கைமாற்றும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.100 கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காத நிலையில், விவசாயிகளை ஏமாற்றி வேறொரு நிறுவனத்திற்கு ஆலையைக் கைமாற்றும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் பின்னணியோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி, ஆலையை அவர்கள் வசம் எடுத்துக்கொள்ள இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விவசாயிகளைக் கடனில் சிக்க வைத்திருப்பதுடன் அவர்கள் ஆலைக்கு அளித்த கரும்புக்கான தொகையையும் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடந்துகொள்கிறது.இது குறித்த கரும்பு விவசாயிகளின் கண்ணீர் குரல்களை மாவட்ட நிர்வாகமோ, திமுக அரசோ கண்டுகொள்ளவில்லை. இப்பிரச்சினையில் உண்மை என்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி நிலுவைத்தொகையை முழுமையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.