துணிவில் நடித்திருக்கிறேன் ஆனால்… ஜி.பி.முத்து ஷேரிங்ஸ்

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. சாமானிய பேச்சும், உடல்மொழியும் அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமான அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் சில வாரங்களே இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பக்குவமாக இருந்ததை கண்டு மக்கள் நெகிழ்ந்துபோனார்கள்.

இதனால் இந்த சீசனில் வலுவான போட்டியாளராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது குடும்பத்தையும், மகனையும் பிரிந்து இருக்க முடியாது என்பதற்காக நிகழ்ச்சியின் பாதியில் அவரே வெளியேறினார். அப்படி அவர் வெளியேறினாலும் அந்த செயலையும் மக்கள் கொண்டாடினார்கள்.

இப்படி படிப்படியாக வளர்ந்துவரும் ஜிபி முத்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் சன்னி லியோன் மற்றும் சதீஷுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொண்டார். இந்தப் படம் மட்டுமின்றி பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

அந்தவகையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு படத்திலும் ஜிபி முத்து நடித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், “ துணிவு படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அஜித்தை நான் பார்க்கவில்லை. அடுத்து அவருடன் நடிக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தது தொடர்பாக பேசிய அவர், “ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளேன். நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். இது என்னுடைய முதல் படம். உங்களின் ஆதரவு எனக்குத் தேவை. உங்களின் ஆசைப்படி நான் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க எனக்கு வாயப்பு கிடைத்துள்ளது.

படத்தில் நடிக்க பயமாக இருந்தது. அது செல்போனில் நடிப்பது போல அல்ல. கேமராவுக்கு முன்னால் நடித்தது கூச்சமாக இருந்தது. இயக்குநர் எனக்கு துணையாக இருந்தார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.