தென்னை மரம் ஏறுவோர் ரூ.94 செலுத்தி காப்பீடு பெறலாம் – தமிழக வேளாண் துறை செயலர் அறிவிப்பு

சென்னை: தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ.94 மட்டும் செலுத்தி, தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க, மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தென்னை மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால், அவர்களது வாரிசுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. நிரந்தர பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ.2.50 லட்சம், மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம், தற்காலிக முழு ஊனத்துக்கு ரூ.18 ஆயிரம், உதவியாளர் செலவுக்கு ரூ.3 ஆயிரம், ஆம்புலன்ஸ் செலவுக்கு ரூ.3 ஆயிரம், இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் காப்பீடு செய்ய ஆண்டு காப்பீடு தொகையாக ரூ.375 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் தங்களது பங்குத்தொகையாக 25 சதவீதம் அதாவது ஆண்டுக்கு ரூ.94 மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய 75 சதவீதம் அதாவது ரூ.281-ஐ தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்தும். இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளவர்கள், தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் (http://www.coconutboard.gov.in) உள்ள விண்ணப்பத்தில், பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன், பகுதிவட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், புதிய பகுதியில் தென்னங்கன்றுகள் நடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான மானியத் தொகை 2 தவணையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தென்னை நாற்றங்கால் பண்ணை அமைக்க 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் சான்று பெற்று ‘இயக்குநர், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம். எண்.47/ எஃப்-1, டாக்டர் ராமசாமி சாலை, சிவன் பூங்கா அருகில்,கே.கே.நகர், சென்னை-8’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.