புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரை அரசு பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த தயா பீல் என்ற 40 வயது இந்து பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, தயா பீல் கொல்லப்பட்ட அவரது கிராமத்திற்குச் சென்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”40 வயது விதவையான தயா பீல் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் மிக மோசமான நிலையில் இருந்தது. தலை துண்டிக்கப்பட்டு, காட்டுமிராண்டிகள் அதை முழுவதுமாக சிதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர்” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை குறித்து ‘தி ரைஸ் நியூஸ்’ (The Rise News) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தயா பீல் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலை ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் தலைவர்களோ அல்லது சிந்து மாகாண தலைவர்களோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. குற்றவாளிகளை காவல் துறை கைது செய்யுமா? சிந்து மாகாணத்தில் வாழும் இந்துக்கள் தங்கள் சொந்த மண்ணில் சமமாக நடத்தப்படுவார்களா?” என கேள்வி எழுப்பி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம், செய்தியாளர்கள் இந்தச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, ”இது குறித்த செய்திகளை நாங்கள் பார்த்தோம். எனினும், இது குறித்து முழு விவரங்கள் எங்களிடம் இல்லை. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.