தமிழகத்தில் அரசு அனுமதியுடன் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக் கடைகள் உள்ளன. இந்தகடைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது.
அதேசமயம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கை தாண்டும். அந்த வகையில் பண்டிகை காலங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
அதன் படி, வருகிற புத்தாண்டு தினத்தன்றும் போதை ஆசாமிகள் மது விருந்து மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். இதை முன்னிட்டு டாஸ்மாக் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த பொங்கல் தினத்தன்று தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் மூன்று நாட்களில் ரூ.675 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருந்தது. தற்போது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிறு என்று இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால், மதுவிற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் படி, இரண்டு நாட்களிலும் சேர்த்து ரூ.300-ல் இருந்து ரூ.400 கோடி வரையில் மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.