பெண் ஓட்டுநருக்கு ஆட்டோ – டிரைவர் ஜமுனா படக்குழு செய்த சிறந்த செயல்

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி தயாரித்து நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் படத்தில் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கலந்துரையாடல் நடத்தி, ஓட்டுநராக பணியாற்றியபோது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர்.

சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் வாகன வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் தொழிலும் ஒன்று. இன்று இந்த தொழிலிலும் பெண்கள் நுழைந்து பயிற்சி பெற்று, திறமை மிக்க ஓட்டுநர்களாக வலம் வருகின்றனர்.

சுய தொழில் செய்து குடும்பத்தின் மேன்மைக்காக அயராது பாடுபடும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் ஓட்டுநர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றினை படக் குழுவினர் பரிசாக வழங்கினர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த பெண் ஓட்டுநருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இது இருந்தது.

சுய முன்னேற்றத்தை விரும்பும் பெண்களுக்கு அடையாளமாக இந்த பரிசு இருந்தது என பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.

திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம், பெண்களிடத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.