மக்கள் தரமான படத்தை மட்டும் பார்த்தால் 50 படங்கள் எடுத்திருப்பேன்: தங்கர் பச்சான் ஆதங்கம்

தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குனர் பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன் நடிக்கும் படம் ‛கருமேகங்கள் கலைகின்றன'. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், லெனின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராமேஸ்வரத்தில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கிறது.

தங்கர் பச்சான் கூறுகையில், இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 10 படங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால், அது பல மாற்றங்கள் அடைந்து வேறு ஒரு படமாக மாறிவிடும். நினைப்பதை எடுக்கும் சூழல் இன்னும் இங்கு வரவில்லை, இந்த படத்தில் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அதற்கு காரணம், சிறிதும் செயற்கைத்தனம் இல்லாத, புனைவு இல்லாத, நம்பகத்தன்மை இல்லாத ஒரு காட்சி, ஒரு உரையாடல் கூட இருக்கக் கூடாது. ஒரு இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனுபவம், படம் பார்ப்பவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஏனென்றால், திரைப்பட கலையைக் கண்டுபிடித்து 110 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும், நாடகத்தன்மையுடைய சினிமா உருவாக்குவதிலும், உண்மைக்கு மாறாக சினிமாக்களை உருவாக்கி மக்களை திசை திருப்புகிறது என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. திரைப்பட கல்வியை கல்வியாகவே படித்ததால் வந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 2006ம் ஆண்டு இந்த கதை எழுதப்பட்டது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் படமாக்க வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதற்கான தயாரிப்பாளரும், நடிகர்களும் அமையவில்லை.

இந்த படத்தில் ராமநாதன் என்ற பாத்திரத்திற்கு பாரதிராஜா அண்ணன் தான் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அவர் இல்லையென்றால் இந்த படமே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். யோகிபாபுவை நகைச்சுவை நடிகர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைக்கும் வகையிலான கதாபாத்திரம் . அவர் எப்படி நடிக்க போகிறார்? என்று நினைத்தேன். எள்ளளவும் நகைச்சுவை இல்லாத பாத்திரம், ஏற்கனவே 15 படங்கள் உங்களுக்கு இருக்கிறது. இப்படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்படும் என்றேன். கதையைக் கேட்டுவிட்டு உருகிவிட்டார். கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகு தான் படமாக தொடங்கியது. கோமகன் என்ற பாத்திரத்தில் இயக்குநர் கவுதம் மேனன் நடிக்கிறார். இதுவரை பார்க்காத கவுதம் மேனனை இப்படத்தில் பார்ப்பார்கள்.

பொதுவாக ஒரு படத்தில் 5 காட்சிகள் உருக வைக்கும் படியாக இருந்தாலே அந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற படம். அப்படி இந்த படத்தில் 20 காட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் ஒன்றி விடுவார்கள். அடுத்தது பெண் கதாபாத்திரத்திற்கு அதிதியை பாலனை தேர்ந்தெடுத்தோம். 'அழகிக் நந்திதா தாஸிடம் ஏற்பட்ட அனுபவம் தான் அவரிடம் ஏற்பட்டது. ஏனென்றால், இந்த கதாபாத்திரத்தை சாதாரணமாக யாரும் நடித்திட முடியாது. இலக்கிய சிந்தனையும் அனுபவம் முதிர்ச்சியும் இருந்தால் தான் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியும்.

எப்போதும் ஒரு தரமான படைப்பு தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கிறது. இப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகிறது என்பது மட்டும் உறுதி. படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளோம். தரமான படங்களை மக்கள் திரையில் கண்டிருந்தால் நான் இன்னும் 50 படங்கள் எடுத்திருப்பேன். மசாலா படங்களை மட்டுமே திரையில் காண விரும்புகிறார்கள். ஆகையால், மக்களின் மனநிலை மாற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

இவ்வாறு தங்கர் பச்சான் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.