விருதுநகர் மாவட்டத்தில் மாணவி தற்கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மேலே தேவதான பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம்(23). இவருக்கும் 17 வயதுடைய மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அப்பொழுது செல்வம் வீட்டில் வரதட்சணை கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில் செல்வத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 6000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து செல்வம், கோர்ட் வளாகத்திலேயே அரளி விதைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.