முத்துப்பேட்டை அலையாத்திகாடு சுற்றுலா செல்ல மீண்டும் அனுமதி: வனத்துறை அறிவிப்பு

முத்துப்பேட்டை:முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன.

மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக் கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.

இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இந்த அலையாத்தி காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதால் கனமழை, சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த 21ம்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்து வனத்துறை அறிவித்து இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் இங்கு செல்வதை தவிர்த்து இருந்தனர்.

தற்போது பள்ளிக்கு விடுமுறை விட்டதால் எப்போது இந்த அலையாத்திக்காட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இன்று (29ம்தேதி) முதல் மீண்டும் அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி, கூறுகையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்ற 9ம்தேதி காட்டிற்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் கடந்த 19ம்தேதி மீண்டும் அனுமதித்து இருந்தது. தற்போது மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் மீண்டும் 21ம்தேதி தடை செய்யப்பட்டது. தற்போது சகஜ நிலைமைக்கு வந்ததால் முத்துப்பேட்டை அலையாத்திக்காடுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.