பெங்களூரு: கர்நாடகாவின் மைசூருவில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்டணாவில் தூய மரியன்னை தேவாலயம் உள்ளது. திங்கள்கிழமை இரவு தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோரின் சிலைகளை தாக்கி சேதப்படுத்தினர். மேலும் தேவாலயத்தில் இருந்த பொருட்களை கீழே போட்டு உடைத்தனர். அங்கிருந்த 4 உண்டியல்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது தேவாலயத்தின் காவலர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பிரியாபட்டணா போலீஸார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும், அருகிலுள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆராய்ந்தனர். ஆலய நிர்வாகிகள், பங்கு தந்தை, காவலர் உள்ளிட்டோரையும் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”தேவாலய தாக்குதல் சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் உண்டியல் காசை திருடும் நோக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி உண்டியலில் சேர்ந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் 5 பேர் உள்ளே புகுந்துள்ளனர். உண்டியலை உடைக்க முடியாத ஆத்திரத்தில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றனர்.