திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “ஓவியத்திற்காக மக்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்தம் முறையான பாதுகாப்பு இல்லாததுடன், இரத்தம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியாது.
அவ்வாறு எடுக்கப்படும் ரத்தத்தை திறந்த நிலையில் வைத்து படம் வரைவதற்கு உபயோகப்படுத்தும் போது, அது எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் பலரை பாதிக்கும். இந்நிலையில், சென்னையில் வடபழனி மற்றும் தியாகராய நகர் பகுதியில் இருக்கிற பிளட் ஆர்ட் நிறுவனங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ரத்த ஓவியம் வரைவதற்காக பயன்படுத்தப்படும் ரத்தக் குப்பிகள், ஊசிகள் மற்றும் அவர்கள் வரைந்து வைத்திருந்த படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் அங்குள்ளவர்களுக்கு பிளட் ஆர்ட் வரைகிற பணியை நிறுத்திக் கொள்ளுங்கள். ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரத்தம் என்பது பல உயிர்களை காக்கும் புனிதத் தன்மையுடைய ஒன்று. உலகம் முழுவதும் ரத்ததானம் செய்வது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்றாலும், அதை எடுத்து படம் வரைந்து வீணாக்குவது என்பது சரியான ஒன்று அல்ல” என்று அவர் தெரிவித்தார்.