“ரத்த ஓவியங்களுக்குத் தடை, மீறும் நிறுவனங்களுக்கு சீல்…" அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

மனித உயிர் விலைமதிப்பற்றது. ரத்ததானம், பல உயிர்களை எதிர்பாராத விபத்துகளில் இருந்து காப்பாற்றி வருகிறது. ஆனால் அந்த ரத்தத்தின் மதிப்பு தெரியாதவர்கள், அதை வீணடித்து வருவது கவலைக்குரியது. அதிலும் பிரபலங்களும் படித்த இளைஞர்களும் இந்தச் செயல்களை ஊக்கப்படுத்தி வருவது மிகவும் வேதனையானது என்று, பலரும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை வடபழனி, தியாகராய நகர் பகுதியில் உள்ள பிளட் ஆர்ட் (Blood Art)  நிறுவனங்களை, மருத்துவத்துறை அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். அங்கு ரத்த ஓவியம் வரையப் பயன்படுத்தப்பட்ட பல பொருள்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்த ரத்தக்குப்பிகள், ஊசிகள் மற்றும் அவர்கள் வரைந்து வைத்திருந்த படங்களை எல்லாவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

மா.சுப்பிரமணியன்

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது , பிளட் ஆர்ட் குறித்து கேட்டனர்.

ரத்த ஓவியம் தடை பற்றிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கையில், “ரத்தத்தில் ஓவியம் வரைந்து விருப்பமானவர்களுக்கு அனுப்பும் `பிளட் ஆர்ட்’ எனும் கலாசாரம் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவம், அதை ஒரு தொழிலாகவே பலர் செய்து வருவதும் வேதனையானது. இது சரியானது அல்ல. ரத்த ஓவியத்தால் ஹெச்.ஐ.வி கூட பரவ வாய்ப்புள்ளதால் அலட்சியமாகச் செயல்படக் கூடாது.  இந்த கலாசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ரத்த சோதனை

சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் இந்தத் தொழிலை நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. ஒருவருடைய ரத்தத்தை எடுத்துத்தான் வரைய வேண்டும் என்று இல்லை. அன்பு, நட்பு, காதல் மூன்றையும் பகிர்ந்து கொள்ள பல வழிகள் உள்ளன. அதற்கு ரத்தத்தில் ஓவியங்கள் வரைந்துதான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒருவரது உடலிலிருந்து முறையற்ற வழிகளில் எடுக்கப்படும் ரத்தத்தின் வாயிலாக நோய்பரவும் அபாயம் ஏற்படும்.

ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையான பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடு மட்டுமல்லாமல் ரத்தம் எடுக்கப் பயன்படுத்தும் ஊசியை எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. அந்த ரத்தத்தை திறந்தநிலையில் படம் வரைவதற்கு கையாளும்போது, அது ஹெஎச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டால் , பலரை பாதிப்புக்கு உள்ளாக்கும்.

சென்னையில் இதுபோன்ற நிறுவனங்களை ஆய்வு செய்து எச்சரிக்கப்பட்டுள்ளனர். அப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரத்த ஓவியப்பணியை இத்துடன் நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை செய்துள்ளோம்  நிறுத்தாவிட்டால், அந்நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். ஒருவரது உடலில் இருந்து ரத்தத்தை எடுப்பது மருத்தவத்துறையினரின் வேலை. ரத்தம் என்பது மிக அத்தியாவசியமானது, பல உயிர்களைக் காக்கிற புனிதத்தன்மையுடையது. ரத்ததானம் செய்வது என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அந்த ரத்தத்தை எடுத்து படம் வரைந்து வீணாக்குவது சரியானது அல்ல. இளைஞர்கள் இத்தகைய விஷயங்களில் ஆர்வம் காட்டக் கூடாது” என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.