விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தாரா அண்ணாமலை?… செந்தில் பாலாஜியின் பரபர ட்வீட்

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். சமீபத்தில் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்திருந்த செந்தில் பாலாஜி, “பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை விரைவில் ரசீதை வெளியிடுவேன். திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது” என கூறி அதகளம் செய்தார். இப்படி செந்தில் பாலாஜியின் ஒவ்வொரு ட்வீட்டும் மக்களிடம் பேசுபொருளானது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி புதிய ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், “கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது.

மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால்,  அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார்.

போட்டோஷாப் கட்சி என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பாஜக கட்சி என்பது கவனிக்கத்தக்கது. எனவே செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருப்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைத்தான் என பலர் சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகின்றனர். மேலும், விமானத்தின் எமர்ஜென்சி கதவை யாரேனும் திறப்பார்களா எனவும் அவர்கள் கிண்டல் செய்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.