3வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்: சுமார் 40 பேர் மயக்கம்!

அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஒரு விதமான ஊதியமும்; 2009 மே மாதம் முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு மாதிரியான ஊதியமும் வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு 8,000 ரூபாய் வரை ஊதியம் மாறுபடுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

image
ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 2018ம் ஆண்டு முதல் அரசிடம் பேசி வருவதாக கூறுகின்றனர். எனவே சம வேலைக்கு சம ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாள் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
image

தமிழக அரசு உடனடியாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், இல்லலையெனில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். போராட்டம் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தால் மயக்கமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.