நேபிதாவ்: மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூச்சி-க்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மியான்மரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும், அந்நாட்டின் ஆட்சியாளராகவும் இருந்தவர் ஆங் சான் சூச்சி. இவரது ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது. மேலும், ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியது உள்பட 14 குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரை வீட்டுச் சிறையில் அடைத்தது.
அதோடு, மேலும் 19 குற்றச்சாட்டுக்களை ராணுவ அரசு அவர் மீது சுமத்தியது. 18 மாதங்களாக இது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. இதில், 5 குற்றச்சாட்டுக்கள் மீது மியன்மர் ராணுவம் தீர்ப்பு அளித்துள்ளது. அமைச்சர் என்ற முறையில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததில் விதிமுறைகளை பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக 7 ஆண்டுகள் கூடுதலாக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனையோடு சேர்த்து மொத்தம் 33 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்னை விதிக்கப்பட்டுள்ளது. 77 வயதாகும் ஆங் சான் சுகி 100 வயது வரை வீட்டுச் சிறையில் இருக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆங் சான் சூச்சி மறுத்துள்ளார். அவரை விடுவிக்குமாறு ஐநா பாதுகாப்பு அவை கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.