நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகில் கட்டிப்பாளையம் பெரிய காடு பகுதியில் வசித்து வரும் 65 வயதான பழனிசாமி என்பவர் ஒரு விவசாயி.
ரியல் எஸ்டேட் தொழிலும் இவர் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 2014இல் முருகேசன் என்ற நபரிடம் 19 லட்சம் கடன் வாங்கி இருக்கின்றார். இந்த கடன் தொகைக்கு பிணையாக தனது நிலம் மற்றும் கிணறு ஆகியவற்றின் தாய் பத்திரத்தை அடமானமாக கொடுத்திருக்கிறார்.
இந்த 19 லட்சம் அசல், வட்டி என மொத்தமாக 38.61 லட்சம் ரூபாயை முருகேசனுக்கு அவர் கொடுத்துள்ளார். அதன் பின்னும் பழனிசாமிக்கு சொந்தமான கிணறு மற்றும் நிலத்தின் அசல் பத்திரத்தை முருகேசன் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, முருகேசன் வசித்து வந்த கடத்தூர் அக்ரஹாரம் பகுதிக்கு சென்ற பழனிசாமி அவரிடம் தனது பத்திரத்தை கேட்டுள்ளார். அப்போது, தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.