புதுடெல்லி: கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டாவில் செயல்பட்டு வரும் மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேரியான் பயோடெக் நிறுவனம் Dok-1 Max என்ற இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகளை தயாரித்து வருகிறது. Dok-1 Max மருந்தை எடுத்துக்கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு சமீபத்தில் குற்றம்சாட்டியது. மேலும், மேரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
இதையடுத்து, நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சென்ற மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்த Dok-1 Max மருந்தை நேற்று முன்தினம் (புதன் கிழமை) ஆய்வுக்கு அனுப்பினர். அதன் முடிவுகள் நேற்று கிடைத்தன. இதில், மருந்தில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, Dok-1 Max மருந்து உள்பட அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.
இதனை தனது ட்விட்டர் பதிவில் இன்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மேரியான் பயோடெக் நிறுவனத்தில் நேற்று இரவு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், மருந்து தயாரிப்பைப் பொருத்தவரை தங்கள் பக்கம் எவ்விதத் தவறும் இல்லை என மேரியான் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹசன் ஹாரிஸ், ”நாங்கள் தயாரித்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம். எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை” என தெரிவித்துள்ளார்.