புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார்.
கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. தேசிய கங்கை நதி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷகர் சிங் தாமி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இதில் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, காலை 9.30 மணி அளவில் அவரது தகனம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் அவர் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதையடுத்து, இரண்டாவது நிகழ்ச்சியாக தேசிய கங்கை நதி கவுன்சில் கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டார்.
கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் நவாமி கங்கே எனும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தது. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கங்கையில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் 46-வது செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உலகின் மிகப் பெரிய 10 திட்டங்களில் ஒன்றாக நவாமி கங்கே திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.