கடந்த ஆண்டு 142, இந்த ஆண்டு 120… இந்தியாவில் 24 பில்லியனர்கள் காணாமல் போனது ஏன்?

ஒரு வருடத்திற்குமுன்பே 142-ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 120-ஆகக் குறைந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே வேளையில், அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்தின் நிகர மதிப்பு 70% உயர்ந்து அதாவது, 136 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதால், இன்னும் பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார்.

கௌதம் அதானி

2021-ஆம் ஆண்டு பில்லியனர்கள் பட்டியலில் இருந்த பலரின் பெயர் தற்போது பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் சில பணக்கார இந்திய தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்களாகி உள்ளனர்.

இந்தியாவில் உள்ள டாலர்-பில்லியனர் தொழிலதிபர்களின் எண்ணிக்கை 2021-இன் இறுதியில் 142-இல் இருந்து 120-ஆகக் குறைந்துள்ளது. மேலும், பில்லியனர் தொழிலதிபர்களின் மொத்த சொத்து மதிப்பு 8.8% குறைந்து அதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு 751.6 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது 685 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்திலிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியை முறியடித்து, 2022-ஆம் காலண்டர் ஆண்டில் இந்தியாவின் பெரும் பணக்காரராக கௌதம் அதானி உயர்ந்துள்ளார். அதானியின் நிகர மதிப்பு 2021-ம் ஆண்டின் இறுதியில் 80 பில்லியன் டாலராக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் 69.6% அதிகரித்து 135.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. புளும்பெர்க் தரவுகளின்படி, அதானி ஆசியாவின் பெரும் பணக்காரராகவும், உலகின் மூன்றாவது பணக்காரராகவும் உள்ளார்.

கெளதம் அதானி, முகேஷ் அம்பானி!

கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த அம்பானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 104.4 பில்லியன் டாலரிலிருந்து 2.5% சரிந்து, 101.75 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த நிகர மதிப்பானது டிசம்பர் 23, 2022 கணக்கின்படி, அம்பானி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு/டிரஸ்டுகளுக்கு சொந்தமான பங்குகளின் மதிப்பைக் குறிக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போர், உயர் பணவீக்கம், பொருள்களின் விலைகளில் உள்ள ஏற்ற இறக்கம் மற்றும் இந்தியா உட்பட முன்னணி உலக நாடுகளில் அதிகரித்துவரும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவிலும் உலக அளவிலும் பங்குச் சந்தைகள் ஒரு வருடத்தில் பல்வேறு மாறுபட்ட போக்குகளை சந்தித்து வந்துள்ளது.

அதானி

இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலிலும் இதன் தாக்கத்தை அறியலாம். இதில் மூன்று பேர் – அதானி, சன் பார்மாவின் திலீப் ஷங்வி மற்றும் பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் ஆகியோர் தங்கள் நிகர மதிப்பில் லாபம் கண்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மொபைல் சேவை நிறுவனங்களால் எடுக்கப்பட்ட கட்டண உயர்வு, மற்றும் நிலையான வணிகச் சூழல் ஆகியவற்றால் பார்தி ஏர்டெல்லின் எழுச்சியே, மிட்டலின் நிகர லாப உயர்வுக்கு காரணமாகும்.

‘ஷங்வியின் வழிநடத்தல் காரணமாக, சன் பார்மாவின் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வட அமெரிக்காவில் மேற்கொண்ட சிறப்பான வர்த்தக உத்தியே, சன் பார்மாவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

சொத்து மதிப்பு குறைந்தது…

  • பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மாவின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 65% குறைந்து ரூ.2,915 கோடி குறைந்திருக்கிறது.

  • ஓரியன்ட் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் சி.கே.பிர்லாவின் சொத்து மதிப்பு 43% குறைந்து, ரூ.7,238 கோடியாக இருக்கிறது.

  • தவிர, தனியா பிளாட்பார்ம் நிறுவனத்தின் அதிபர் உதய் குமார் ரெட்டியின் சொத்து மதிப்பு 65% குறைந்துள்ளது.

  • மெட்ரோபோலீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சுசில் ஷாவின் சொத்து மதிப்பு 65 % குறைந்துள்ளது.

  • லக்ஸ் நிறுவனத்தின் அசோக் குமார் தோடியின் சொத்து மதிப்பு 60 % குறைந்துள்ளது.

  • லஷ்மி ஆர்கானிக் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ரவி கோயங்காவின் சொத்து மதிப்பு 55 % குறைந்துள்ளது.

  • லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸின் தலைவர் வெங்கட் விஸ்வநாதனின் சொத்து 48 % குறைந்துள்ளது.

பங்குச் சந்தை சரிவு

இந்த மதிப்பு எல்லாமே பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள அவர்களின் நிறுவனப் பங்குகளின் மதிப்பை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியானது இந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தால், அவர்களின் சொத்து மதிப்பு உயரும்; அப்படி இல்லாவிட்டால், பங்கு விலை குறைந்து, அவர்களின் சொத்து மதிப்பு குறையும்.

ஒரு பில்லியனர் பட்டியலில் இடம்பெறுவதும், இடம்பெறாமல் போவதும் நிலையான விஷயமல்ல. ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது என்பதை நினைவில் கொள்வது நல்லது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.