கடலுக்குள் கண்ணாடி தரையுடன் கூடிய 650 மீட்டர் பாலம்.. கலைஞரின் பேனா வடிவ சின்னம்

சென்னை மெரினாவில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் குழு, நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசின் முன்மொழிவுக்கு நிபந்தனைகளுடன் சில விதிமுறைகளையும் வழங்கியது.

81 கோடியில் கட்டப்படவுள்ள இந்த பேனா நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இதனை அருகில் சென்று பார்க்க நினைவிடத்தில் இருந்து 290 மீட்டருக்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டருக்கும் பாலம் கட்டடப்பவுள்ளது.

இதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆவணங்களை இறுதி செய்து, அவற்றை மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் சமர்ப்பித்து அதன் பிறகு மத்திய அமைச்சகத்தின் குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்தக் குழு CRZ அனுமதிக்கான மனுவை பரிசீலிக்கும். கடலோர மண்டல மேலாண்மை ஏற்கனவே இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், நினைவு சின்னம் கட்டமைப்புக்கான மாநில அரசு வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் கூடிய இடர் மதிப்பீட்டு அறிக்கை உட்பட பிற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. மேலும், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்கப்படும் பேனா சின்னத்தை அருகில் சென்று காண கடல் அலை வடிவத்தில் பாலம் அமைக்கப்படவுள்ளது. கடல் மேல் மட்டத்தில் இருந்து அந்த பேனா சின்னம் 42 மீட்டர் உயரத்துக்கு இருக்கும்.

42 மீட்டர் உயரமுள்ள நினைவுச்சின்னத்தை அடைய பார்வையாளர்கள் கண்ணாடி தரையுடன் கூடிய 650 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட பாலத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த பாலம், உயர் அலைக் கோட்டிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இருக்கும். இந்த பேனா சின்னம் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை குறிக்கும் வகையில் அமைத்து அவரது சொற்பொழிவுகளை பேனாவுக்கு கீழ் கல்வெட்டராக பொறிக்கவும், நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் சிக்குக் கோலம் வடிவில் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.