விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (51). இவரது 3வது மகள் பாரதி (25). இவர் 12ம் வகுப்பு முடித்து விட்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பாரதிக்கு வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்தனர். அதில் விருப்பமில்லாத பாரதி முகநூலின் மூலமாக தஞ்சாவூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட வாலிபருடன் வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து குழந்தையுடன் பாரதி கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தில் உள்ள பாரதியின் அக்கா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்தக் கிராமத்தில் உள்ள செல்வபாண்டி (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதில் பாரதி கருவுற்று பின்னர் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வீரங்கிபுரத்திலேயே வசித்து வந்துள்ளனர்.
இதில் பாரதி 2 மாத கர்ப்பிணியானார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கருவை கலைக்கும் நோக்கில் கர்ப்பிணி வயிற்றில் கடந்த 21ம் தேதி செல்வபாண்டி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் பாரதிக்கு ரத்தபோக்கு ஏற்பட்டு வீட்டிலேயே நாட்டு வைத்தியம் செய்து வந்துள்ளனர். அதில் பலனளிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதால் பாரதியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த பாரதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாரதியின் தந்தை சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து செல்வபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.