நெல்லூர்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், கந்துகூரு என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்க தொண்டர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த சமயத்தில் சந்திரபாபு வாகனத்தின் பின்னால் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் பொதுக்கூட்ட மேடை அருகே வாகன நிறுத்துமிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தன.
ஆனால் அதே இடத்தில் சாலையின் இருபுறமும் மோட்டார் பைக்குகள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இவர்கள் ராஜா (48), ராஜேஸ்வரி (40), யானாதி (55), மதுபாபு (44), விஜயா (45), ரவீந்திரா (73), புருஷோத்தம் (70), சின்ன கொண்டய்யா (52) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர், நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரூ.25 லட்சம் நிதியுதவி: விபத்து நடந்ததால், சந்திரபாபு உடனடியாக பொதுக்கூட்டத்தை ரத்து செய்தார். மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், விபத்தில் இறந்த தொண்டர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்தார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிலர் தங்களது சொந்த நிதியில் தலா ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார். ஆந்திர அரசு சார்பிலும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 8 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நெல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டன. அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் என முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஆந்திர அரசு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்காத காரணத்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறியதாலும் தான் இந்த விபத்து நடந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.