அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு. தகுதியான பயனாளர்களுக்கு எக்காரணம் கொண்டும் பரிசு தொகுப்பை வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது. பொங்கல் பரிசு தொகுப்புகள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவதை ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி மற்றும் முழு கரும்பு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை துணை ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். வரும் ஜனவரி 9ம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்க வேண்டும்.
நாளொன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் பெற ஏதுவாக ஜனவரி 3 முதல் 8 தேதி வரை டோக்கன் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு விநியோகத்திற்காக வரும் ஜனவரி 13-ஆம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட வேண்டும். வரும் 13ஆம் தேதி நியாய விலை கடைகள் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் அதனை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 27ஆம் தேதி அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.