டிரைவர் ஜமுனா விமர்சனம்: பரபர சேஸிங்குடன் ஒரு ரோடு சினிமா; ஆனால் அந்தப் பயணம் சீராக இருந்ததா?

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் `வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் கையில் எடுத்திருக்கும் கதைக்களம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாததுதான் என்றாலும், அந்தப் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொண்டதா, இல்லை ஏமாற்றியதா?

தந்தையை இழந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவரின் கால் டாக்ஸி ஓட்டுநர் பணியைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார். வீட்டை அடைமானம் வைத்துவிட்டு ஓடிவிட்ட தம்பி, நோய்வாய்ப்பட்ட அம்மா எனப் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் ஓட்டுநராக தன் தொழிலைச் செய்கிறார். இப்படியான சூழலில், அரசியல்வாதியான ஆடுகளம் நரேனைக் கொலை செய்யக் கிளம்பும் ஒரு கூலிப்படை, ஐஸ்வர்யா ராஜேஷின் கால் டாக்சியில் ஏறுகிறது. பின்னால், அந்தக் கூலிப்படையைத் துரத்தி வருகிறது போலீஸ். இவர்களிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா, கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா, ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ன… போன்ற கேள்விகளுக்கான பதில்களைப் பரபரப்பான ஒரு கார் பயணத்தை வைத்துச் சொல்ல முயன்றிருக்கிறது படம்.

டிரைவர் ஜமுனா விமர்சனம்

பக்கவாதத்தால் அவதியுறும் தாய், தந்தையின் இறப்பு, உதவாமல் ஓடிப்போன தம்பி, இவற்றால் தனியாளாகக் குடும்பத்தைச் சுமப்பது, ஓட்டுநர் தொழில்மீது உள்ள காதல் என முதற்பாதியில் வரும் டிரைவர் ஜமுனா கதாபாத்திரங்களுக்கான காட்சிகளில், ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால், அவர் முகத்தில் படர்ந்திருக்கும் இறுக்கம், படத்தின் அனைத்து சூழ்நிலைகளிலும் மாறாமலே இருப்பது, ஒருவித அலுப்பையே தருகிறது. இறுதிப் பகுதியில் வரும் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளில் மட்டும் கவனம் பெறுகிறார்.

மறுபுறம், முன்னாள் எம்.எல்.ஏ-வாக வரும் ஆடுகளம் நரேன், தனது நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார். தனது துறுதுறு நடிப்பால், ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரம் கவனம் பெறுகிறது. அம்மாவாக வரும் ஶ்ரீரஞ்சனி, எம்.எல்.ஏ-வாக வரும் கவிதா பாரதி, ‘பிக் பாஸ்’ மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் ஓரளவுக்கு நடிப்பில் பங்களித்திருக்கிறார்கள். விறுவிறுப்பான திரைக்கதையில், கொஞ்சம் இளைப்பாறலாக இருக்க வேண்டிய அபிஷேக்கின் காமெடிகள், தொந்தரவாகவே நீள்கின்றன.

திரைக்கதையிலிருந்து வெளியே தவ்வியோடும் படியான பாடல் காட்சிகள், காதல் காட்சிகள், அதிரடி சண்டைக் காட்சிகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒரு திரைக்கதையை அமைத்தற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.

டிரைவர் ஜமுனா விமர்சனம்

ஆனால், படத்தை வேகமாக நகர்த்துவதற்காக, நம்பகத்தன்மையே இல்லாத காட்சிகளை வரிசையாக அடுக்கியதால், எதிலுமே ஒன்ற முடியவில்லை. கூலிப்படையின் மேல் பயமும் கோபமும் வருவதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் கோமாளித்தனத்தால் நகைப்பு மட்டுமே மிஞ்சுகிறது. இவ்வளவு அஜாக்கிரதையான ஆட்கள் எப்படித் தொடர் கொலைகள் செய்து போலீஸே தேடும் அளவுக்கு இருக்கிறார்கள் என்று ஆச்சரியமே மிஞ்சுகிறது. அதனால், ஐஸ்வர்யா ராஜேஷை பகடைக் காயாகப் பயன்படுத்தித் தப்பிக்க முயலும் காட்சிகளில் பரபரப்பு சுத்தமாக எட்டிப் பார்க்கவில்லை.

வாலாஜாபாத்தில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு, ஒரு டாக்சியில் பயணிக்கும் ஒரு கூலிப்படையைப் பிடிக்க, காவல்துறை ஏன் இவ்வளவு சொதப்பலான திட்டங்களைத் தீட்டுகிறது, இவர்களைப் பிடிக்க ஏன் ஒரு போலீஸ் ஃபோர்சையே இன்ஸ்பெக்‌டர் கேட்கிறார், உயிர்பயத்தில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ ஏன் போலீஸின் உதவியை நாடாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்… என ஒவ்வொரு காட்சியின் முடிவிலும், குழப்பங்களும் கேள்விகளுமே எஞ்சி நிற்கின்றன.

இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சி வரைக்கும், எளிதில் யூகிக்கும்படியாக இருப்பதோடு, சில காட்சிகள் தேவையில்லாமலும் நீண்டிருக்கின்றன. இதனால் படத்தின் இறுதி காட்சிகளில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் உருக்கமான மறுபக்கம், நம்மை எவ்விதத்திலும் அசைக்காமல் மேலோட்டமாக நகர்ந்துவிடுகிறது.

டைட்டில் கார்ட் தொடங்கி, இறுதிக்காட்சி வரைக்கும், பரபரப்புக்குத் தேவையான பின்னணி இசையை இடைவெளியின்றி நிரப்பியிருக்கிறார் ஜிப்ரான். சில இடங்களில் அது திரைக்கதைக்கு உதவியாக இருந்தாலும், பல இடங்களில் தனியாகத் துருத்திக்கொண்டு ஓவர்டோஸாக மாறுகிறது. படம் முடிந்து வரும் ஒரே பாடல் காதுகளுக்கு இனிமை.

டிரைவர் ஜமுனா விமர்சனம்

சேசிங் காட்சிகளிலும், காருக்குள்ளே நடக்கும் காட்சிகளிலும் கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவும் ஆர்.ராமரின் படத்தொகுப்பும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது. ஆனால் ஹைவேயில் போலீஸ் அட்டாக் செய்யும்போது சுவாரஸ்யம் சேர்க்கிறேன் என அவற்றைக் காட்டாமல் ஐஸ்வர்யா ராஜேஷின் ரியாக்ஷனை மட்டும் காட்சிப்படுத்திய அந்த எடிட்டிங் ஐடியாவால் உண்மையிலேயே அங்கே என்ன நடக்கிறது என்பதில் ஒருவித தெளிவின்மையே எட்டிப் பார்க்கிறது.

பேப்பரில் சுவாரஸ்யமாக அமைந்த ஒன்லைனை, பரபர திரைக்கதையாக மாற்றி ஹைவேஸில் ஓடவிட்டபோது, இயக்குநர் ஸ்பீட் பிரேக்கர்களைக் கவனிக்காமல் விட்ட உணர்வைத் தருகிறாள் இந்த `டிரைவர் ஜமுனா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.