தமிழக காவல்துறையில் பணியில் இருந்த பொழுது மறைந்த போலீசாரின் வாரிசுகளுக்கு கருணையின் அடிப்படையில் காவல் நிலையங்களில் வரவேற்பாளர் பணி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 912 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 67 ஆண்கள் மற்றும் 46 பெண்கள் என 113 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் அடையாளமாக 12 பேருக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் தொடர்பு, கணினி பயிற்சி, காவல் நிலைய பணிகள், தட்டச்சு போன்ற பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அனைவரும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.