பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! – திருமாவளவன் வலியுறுத்தல்!

“பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ கட்டடத்தில் அகில இந்திய எஸ்சி – எஸ்டி பணியாளர்கள் நல சங்கம் சார்பாக வழங்கப்படும் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு சுய தொழில் புரிவதற்கான உபகரணங்களை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தாயார் நூறு வயது வரை வாழ்ந்து காலம் ஆகி இருக்கிறார். அவருடைய மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது. பிரதமர் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவை கலந்து இருக்கிறார்கள். இது காட்டுமிராண்டித்தனமான செயல்.

இழிவான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நீண்ட காலமாக அந்த பகுதியில் தலித் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை துணிச்சலானது, பாராட்டு கூறியது. இந்த சம்பவம் குறித்து நாளை எனது தலைமையில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் கழிவு கலந்திருப்பது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது போன்ற செயல்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது . அந்த சுதந்திரம் இருப்பதால் தான் துணிச்சலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு அவர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசளிக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாணவிகளுக்கு வழங்கப்படுகிற ஆயிரம் ரூபாய் சிலருக்கு கிடைப்பதில்லை. அதேபோல் ஏழு சதவீதம் மருத்துவ கல்வி சேர்க்க இட ஒதுக்கீடு சலுகைகள் மாணவர்களுக்கு முறையாக சென்று சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.