பதில் சொல்லாதீங்க, போய் வேலையை பாருங்க: அமைச்சருக்கு ஆர்.பி. உதயகுமார் பதில்!

இலவச வேட்டி சேலை தொடர்பாக அமைச்சர் ஆர்.காந்தி அளித்த விளக்கத்துக்கு, ‘பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும், தைப்பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குகிற மகத்தான திட்டம் ஆண்டு முழுவதும், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணமும் புரட்சித்தலைவரால் 1983ஆம் ஆண்டு விலையில்லா வேட்டிகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதை இந்த நாடு நன்கு அறியும்.

அதை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா இந்த விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் முழு தரத்தோடு அமைய வேண்டும் என்கிற அந்த உன்னத நோக்கத்தோடு, விலையில்லா வேட்டி சேலைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்பட்டதை இந்த நாடு நன்கு அறியும்.

அதனை தொடர்ந்து

தலைமையிலான அம்மா அரசிலே 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முன்பாக 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு, தைத்திருநாள் தமிழகத்தில் நாளை முன்னிட்டு 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், உலர் திராட்சை, முந்திரி, ஒரு முழு கரும்பு இதோடு, ஒரு கோடி 80 லட்சத்து 42 ஆயிரம் பெண்களுக்கு சேலைகள், ஒரு கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம் ஆண்களுக்கு வேஷ்டிகள் வழங்கப்பட்டது .இதையெல்லாம் இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் .

தற்போது வேட்டி,சேலைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகளை எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு அறிக்கையை, கோரிக்கையை, கண்டனத்தையும், எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் .

2023ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நெய்யும் பணியில் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய நிர்வாக குளறுபடிகளால், இன்றைக்கு முடங்கிப் போய் இருப்பதால், நெசவாளர்களுக்கு கூட்டுறவு சொசைட்டிகளை சேர்ந்தவர்களுக்கும் பேராபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜூலை மாதமே வழங்க வேண்டிய நூல் நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலே வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்தில் தான் வழங்கப்பட்டது . இது மிகப் பெரிய நிர்வாகக் குளறுபடி.

இன்றைக்கு துணி நெய்து கொண்டிருக்கிற நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதாகவும், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றார்கள். இதனால் 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை கொடுக்கப்பட்ட நூல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை, நெசவாளர்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாக அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தார்.

இதன் காரணமாக தைப்பொங்கலுக்கு ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் உடுத்த உடை என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திட்டம் மக்களுக்கு சென்று சேருமா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தி இருப்பதாக இன்றைக்கு நாடு முழுவதும் பேச்சு எழுந்திருக்கிறது.

வேட்டி, சேலை வழங்காவிட்டால் நெசவாளர்கள் வேலை இழந்து தவிப்பார்கள். இதனால் ஏழை எளிய மக்களையும் ஒன்றிணைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிற அந்த குற்றச்சாட்டுகளுக்கு, கைத்தறி துறை அமைச்சர் அளித்தது உரிய பதிலாக தெரியவில்லை.

வேட்டி,சேலை திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்திருக்கிற கண்டன குரலுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறி இருக்கிற பதில் வளவள , கொளகொளவாக, கழுவுற மீனில் நழுவுகிற மீனாகத்தான் இருக்கிறது. தவிர, உள்ளபடியே உண்மையை எடுத்துச் சொல்லுகிற அறிக்கையாக அமையவில்லை.

நீங்கள் பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.