பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

குஜராத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. தாயார் ஹீராபென் மோடி, ஆமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானார். இந்நிலையில் பிரதமரின் தாயாருக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி .முதல்வர் ஷிவ்ராஜ் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

* பாரத பிரதமரின் அன்னையின் மறைவு செய்தி இதயத்தில் பேரிடியாக இறங்கியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

* பிரதமர் மோடியின் தாயார் மறைவு இந்திய மக்களுக்கே பெரிய இழப்பாகும் என பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் கூறியுள்ளார்.

* பிரதமர் மோடியின் உயர்விற்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர் தாயார் ஹீராபென் என வாசன் தெரிவித்திருக்கிறார்.

* பிரதமரின் தாயார் மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார் கூறியுள்ளார்.

* பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு; அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தமிழக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

* பிரதமர் மோடியின் தாயார் கடவுளின் பாத கமலத்தை சென்றடைந்தார் என்ற புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் கூறியுள்ளார்.

* பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. நரேந்திர மோடி அவர்களின் வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

* பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.