சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக பாஜகவின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் அஞ்சலி செலுத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் மோடியின் திருஉருவப் படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அனைத்து மாவட்ட தலைவர்களும் இதற்கான ஏற்பாட்டை உடனடியாக செய்ய வேண்டுகிறேன்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.