பிரேசில் ‘கால்பந்து அரசன்’ என்று அழைக்கப்படும் பீலே மறைவையொட்டி, அந்த நாட்டில் மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் மரணத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை (29) முதல் மூன்று நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேசில் கால்பந்து வீரர் பீலே வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாh. இறக்கும் போதுஅவருக்கு 82 வயது.
செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு முதல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றமில்லாத நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு இறந்தார். உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு 3 முறை சாம்பியன் பட்டம் (1958, 1962, 1970) வென்று தந்த பீலே, கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
சர்வதேச அரங்கில் பிரேஸிலுக்காக 14 ஆண்டுகள் 92 போட்டிகளில் களம் கண்ட பீலே, அதில் மொத்தமாக 77 கோல்கள் அடித்திருக்கிறார் அதுவே லீக் போட்டிகள் உள்பட சிரேஷ்ட தரத்தை மொத்தமாக கணக்கில்கொண்டால் 700 போட்டிகளில் 655 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார்
கால்பந்து ஜாம்பவானான பீலே, கடந்த 1958-ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற போட்டியின் மூலம் உலகக் கிண்ண கால்பந்தில் அறிமுகமானார். அப்போது 17 வயதையே எட்டியிருந்த அவர் உலகக் கிண்ண போட்டியில் களம் கண்ட மிக இளவயது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டுத் துறை அமைச்சராக 1995 முதல் 98 வரை பதவி வகித்திருந்தார்.
கால்பந்து விளையாட்டின் அரசனாக வர்ணிக்கப்படும் பீலேவின் மறைவுக்கு உலகமே இன்று அஞ்சலி செலுத்துகிறது.