பெரியபாளையம்: பெரியபாளையம் பஜார் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள திருப்பதி-சென்னை சாலையில் எந்நேரமும் 50க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்து ஓய்வெடுப்பதும், குறுக்கே செல்வதுமாக இருந்து வருகிறது. இந்த மாடுகளை உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல் பஜார் சாலையில் அவிழ்த்து விடுவதால், திருப்பதி-சென்னை சாலையோரத்தில் வீசப்படும் உணவு கழிவுகளை உண்டு, அங்கேயே சுற்றி திரிகின்றன. இதுபோன்று மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை மீறி, பெரியபாளையம் பஜார் பகுதியில் ஏராளமான மாடுகளை, அதன் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சில நேரங்களில் இந்த மாடுகளால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, திருப்பதி-சென்னை சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.