மேடை ஏறாதவர்களை ஏற்ற ஆசை ஆனால் அரசு ஒத்துழைக்கவில்லை – பா. இரஞ்சித் காட்டம்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் முன்னெடுப்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்வு நடந்துவருகிறது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய யுவன், “ மார்கழியில் மக்களிசை’யில் கலந்துகொண்டபோது 4 வருடங்களாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்றனர். நான் 4 ஆண்டுகளாக சில விஷயங்களை மிஸ் செய்துவிட்டேன். மியூசிக் தான் நம் அனைவரையும் இணைக்கிறது. இசைக்கு நிறம், சாதி எதுவும் கிடையாது. அந்த இசையால் நாம் இணைந்திருக்கின்றோம் என்பதை நினைக்கையில் நான் மகிழ்கிறேன். பா.ரஞ்சித்திடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “இளையராஜாவைப் பார்த்து நான் திரைத்துறைக்கு வந்தேன். அப்படித்தான் நான் யுவனையும் பார்க்கிறேன். யுவன் இசை என்னை பலமுறை ஆற்றுப்படுத்தியிருக்கின்றது. இந்த மேடையில் அவர் வந்து நிற்பதை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது முக்கியமான விஷயமாக பார்க்கிறேன். யாரையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதன் மூலம் நிறைய கலைஞர்கள் முன்னேறி வருவார்கள். விரைவில் நானும் யுவனும் இணைவோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இரஞ்சித், “இந்த முறை என்னுடைய வேலைப்பளுவால் 3 நாட்கள் நிகழ்வை குறைத்துவிட்டோம். இந்நிகழ்வை நடத்த கலைவாணர் அரங்கை கேட்டோம். ஆனால் அது தரப்படவில்லை. அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மேடையேற்றப்படாத கலைஞர்களை அடையாளப்படுத்தி மக்களிடம் சென்றடைய வைக்கும் முயற்சிதான் இது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

என்னுடைய அடுத்த படத்தில் நிச்சயம் யுவனுடன் இணைந்து பணியாற்றுவேன். கோயிலுக்கு செல்லக் கூடாது என தடுப்பது தவறானது. அதனை நிகழ்த்திக்காட்டிய மாவட்ட ஆட்சியர் கவிதாவுக்கு வாழ்த்துகள். சமூக நீதி குறித்து பேசும் தமிழகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க சட்டங்கள் இருக்கிறது; அரசுகள் மாறினாலும் இந்த பிரச்னை தொடர்ந்து கொண்டேயிருப்பது கவலையான விஷயம். மக்களாகிய நாமும் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே பிரச்னையாக இருக்கிறது. கவிதாவைப் போல மாவட்ட ஆட்சியர்கள் பாதிப்பின் பக்கம் நின்றிருந்தால் பாதிப்புகள் குறைந்திருக்கும். கவிதாவைப் பார்த்து மற்ற அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.