ராமநாதபுரம் அருகே பாரம்பரிய பயிர் கண்காட்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேளாண், உழவர் நலத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்  பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சி, கருத்தரங்கு  குயவன்குடியில் நடந்தது. திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் வரவேற்றார். வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில்,   பாரம்பரிய நெல், சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. இவற்றில் சில ரகங்கள் நோய்களை குணப்படுத்தவும், சில ரகங்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை’ என்றார்.

பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்து அதன் மூலம் மும்மடங்கு லாபம் ஈட்டலாம் என குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் பேசினார். தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி அதில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட ஒன்றிய அரசின் மானியத்திட்டங்கள் குறித்து வேளாண் துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) பாஸ்கரமணியன் பேசினார்.

பாரம்பரிய நெல் ரகங்கள் வறட்சி, வெள்ளம் தாங்கி வளரும் தன்மையுடையது. காட்டுபானம், மாப்பிள்ளை சம்பா நெல் ரகங்கள் நீர்பிடிப்பு பகுதிகளில் வளரும் தன்மையுடையது. அதிக சத்தான கால்நடை தீவனம் தரக்கூடியது என பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் செல்வம் பேசினார்.  விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க, சந்தைபடுத்த அரசின் மானிய திட்டங்கள் குறித்து வேளாண் விற்பனை, வணிகவரி துறை துணை இயக்குநர் மூர்த்தி பேசினார்.

வீரிய ஒட்டு ரக கொய்யா, மா, நெல்லி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு சொட்டுநீர் பாசனம் அமைத்தால் நல்ல லாபம் அடையலாம் என உச்சிபுளி தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெகதீசன் பேசினார். பாரம்பரிய நெல் ரகங்களான சித்திரைக்கார், கருத்தக்கார், வரப்புகுடஞ்சான், கருப்புகவுனி, அறுபதாம் குறுவை ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள், குதிரைவாலி, கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு ஆகிய சிறுதானிய பயிர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற சிறந்த பயிர்கள் என இணை பேராசிரியர் அருணாசலம் கூறினார்.

பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள், அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் ஆகிய கண்காட்சியில் இடம் பெற்றன. 11 வட்டாரங்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.