சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக இதுவரை 61 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், இறந்தவர் பெயர்கள் நீக்கம் இவற்றுக்காக ஆதார் எண்ணை இணைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக 6-பி என்ற படிவம் வெளியிடப்பட்டது. அதை பூர்த்தி செய்து, வீட்டுக்கு வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் வழங்கலாம் என்றும், தேசிய வாக்காளர் பதிவு இணையதளத்தின் மூலம் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலுடன், ஆதார் இணைப்புக்கு வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி 4 மாதம் முடிவுறும் நிலையில், இதுவரை தமிழகத்தில் உள்ள 6.18 கோடி வாக்காளர்களில் 61 சதவீதம் பேர் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக அரியலூரில் 91.4 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம், தருமபுரியில் 81.62 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னையில் 30.4 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 31-ம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன.5-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிவடைந்துள்ளன. இதுதொடர்பாக, இன்று(நேற்று) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிஜி தீவில் தேர்தல் பணி: இந்தியர்கள் அதிகம் வாழும் பிஜி தீவில் அங்குள்ள அரசு சார்பில் டிச.14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்காக சர்வதேச அளவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் இந்தியா சார்பில் சத்யபிரத சாஹூ, தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் அதிகாரி தர்மேந்திர சர்மா, பிஜய் பாண்டே ஆகியோர் சென்றனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘பிஜி தீவில் நடைபெற்ற தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டாலும், வாக்குச்சாவடியிலும், அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திலும் என இரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது’’ என்றார்.