நேப்பியர் பாலத்திற்கு அருகே சென்றபோது இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் எதிர்பாராத நேரத்தில் ஆட்டோவில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவருக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறி வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியே தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தனது காரில் வந்துள்ளார். விபத்து நடந்ததை கண்டு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார்.
பின் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கிய இளைஞர் வேளச்சேரியை சேர்ந்த குமரேசன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலை காரணமாக பாரிஸ் கார்னர் அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அப்போது அவருக்கு உதவிய தலைமைச் செயலாளர் இறையன்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.