புதுடெல்லி: மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சில நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. இலவசமாக வழங்கப்படும் இந்த கரோனா தடுப்பு மருந்தின் மொத்த மதிப்பு ரூ.410 கோடியாகும் என்று கூறப்பட்டுள்ளது. சீனா மற்றும் தென் கொரியா உட்பட சில நாடுகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் சீரம் நிறுவனம் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.