புதுடெல்லி: ஜனவரி 1ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து (நாளை மறுநாள்) சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பாதிப்பு இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழை இந்தியா வரும் பயணிகள் ‘ஏர் சுவிதா’ இணையதளத்தில், புறப்படுவதற்கு முன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்’ என்றார்.