பட்ஜெட் 2023 எதிர்பார்ப்பு: இன்னும் ஒரு மாதத்தில், அதாவது பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். ஆனால் அதற்கு முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனுடன், வரும் பட்ஜெட்டில் வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் கடைசி பட்ஜெட்
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் சம்பள வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. ஆகையால் மோடி அரசின் இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும். மத்திய பட்ஜெட்டில், 80சி பிரிவின் கீழ் சேமிப்பு வரம்பு ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ICAI மூலம் ப்ரீ பட்ஜெட் மெமோராண்டம் 2023-ல், சாமானியர்களுக்கான சேமிப்பு பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வரி நிவாரணத்துக்கான கோரிக்கை
80சி கீழ் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீட்டு வரம்பை அதிகரிக்கவும் ஐசிஏஐ கோரியுள்ளது. தற்போது 1.5 லட்சமாக உள்ள இந்த வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிபிஎஃப் வரம்பை அதிகரிப்பதற்கான கோரிக்கையின் பின்னணியில், இந்த முதலீடு, வணிகர்கள் மற்றும் சம்பள வர்க்கத்தினருக்கான பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக உள்ளது என்ற ICAI இன் வாதம் உள்ளது.
சம்பள வர்க்கத்தினர் பிஎஃப்-ல் பங்களிப்பதால், அதன் கீழ் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், அவர்களிடம் வரி சேமிப்புக்கான வரையறுக்கப்பட்ட விருப்பங்களே மிஞ்சுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் என்ற வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தவிர, 80DDB இன் கீழ் செலவின வரம்பை அதிகரிக்குமாறு நிதி அமைச்சகத்திடம் ICAI கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.