2022-23 (AY 2022-23) மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்தத் தவறைச் சரிசெய்ய உங்களுக்கு இன்னும் கடைசி வாய்ப்பு உள்ளது. அதன்படி 31 டிசம்பர் 2022க்குள் (நாளை) நீங்கள் தாக்கல் செய்துக்கொள்ளலாம். அத்துடான புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் அதன் பிறகு வருமான வரி உங்களால் தாக்கல் செய்ய முடியாது.
சம்பளம் பெறும் ஊழியர்கள், சிறு வணிகங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட பெரும்பாலான தனிப்பட்ட வரி செலுத்துவோர், AY 2022-23க்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். ஆனால் சரியான நேரத்தில் ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள், அதன்பிறகு அதைச் செய்ய முடியாமல் போனவர்கள், தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி வாய்ப்பு இன்னும் உள்ளது. இது தவிர, ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்கள், ஆனால் அதில் சில மாற்றங்களைச் செய்து, திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய விரும்புபவர்களும் செய்யலாம். எனவே இந்த இரண்டு வகையான வரி செலுத்துபவர்களும் நாளை அதாவது டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யலாம்.
இந்த நிலையில் திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்தக் காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செய்ய அபராதம் இல்லை. புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் ஆண்டு மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும், ஆண்டு மொத்த வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் ரூ. 1,000 அபராதமும் கட்ட வேண்டும்.
டிசம்பர் 31க்குள் ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியவில்லை என்றால், அதன் பிறகு தானாகச் செய்ய முடியாது. ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு ரிட்டர்ன் தாக்கல் செய்ய, வருமான வரித்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அல்லது வருமான வரித்துறையின் விசாரணையில் நீங்கள் ரிட்டன் தாக்கல் செய்திருக்க வேண்டும், அத்துடன் நீங்கள் அதிக அபராதம் மற்றும் ஆய்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.
இதற்கிடையில் கடந்த 2020 – 21-ம் நிதியாண்டில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் சுமார் 5.89 கோடி வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. கடைசி நாளில் மட்டும் 9-லிருந்து 10 சதவிகித வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது, 50 லட்சம் வருமான வரி தாக்கல் பதிவுகள் அந்த ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தகக்கது.