சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது.
உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக ஜன.16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்குமாறு 8 தேசியக் கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுகவிற்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று கூறிய அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினர்.
முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு சட்ட ஆணையம் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > யாருடைய தலைமையில் அதிமுக கட்சி இயங்குகிறது? – மத்திய அரசு, சட்ட ஆணையம், தேர்தல் ஆணைய கடிதங்களால் குழப்பம்