கால்பந்து உலகின் சரித்திர நாயகன் பீலே. ‘மின்னல்’ வேகத்தில் ஓடிச் சென்று கோல் அடிப்பதில் வல்லவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர், அசாத்திய திறமையால் உச்சம் தொட்டார். சாமான்யன் முதல் உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்கள் வரை, இவரது கலக்கல் ஆட்டத்திற்கு அடிமையாகினர். ‘கருப்பு முத்து’ என போற்றப் பட்ட இவர், தனது புன்னகையால் ரசிகர்களை கவர்ந்தார். உலகை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் என்றென்றும் இடம் பெற்றிருப்பார்.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே 82. சிறு வயது முதல் கால்பந்து மீது மோகம் கொண்டவர். இவரது திறமையை பார்த்த உள்ளூர் கால்பந்து வீரர் ஒருவர், 11 வயதில் யூத் அணியில் சேர்த்து விட்டார். கால்பந்து விளையாடுவதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, தெருக்களில் ‘ஷூ பாலிஷ்’ செய்து பணம் சேர்த்தார். 5 அடி, 8 ‘இன்ச்’ உயரம் கொண்ட இளம் பீலே, சீனியர் வீரர்கள் அணியில் இடம் பெற்று கோல் அடித்து திறமை வெளிப் படுத்தினார். 1956ல் பிரேசிலின் சாண்டோஸ் கிளப் அணியில் அறிமுகம் ஆனார்.
பிரேசில் அணிக்காக 17 வயதில் உலக கோப்பை (1958) அணியில் இடம் பெற்றார். இத்தொடரின் அரையிறுதியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மிரட்டிய இவர், சுவீடனுக்கு எதிராக 2 கோல் அடித்து கோப்பை வெல்ல கைகொடுத்தார். அடுத்து 1962 உலக கோப்பை வென்ற அணியிலும் இடம் பெற்றார். 1966ல் லீக் சுற்றுடன் பிரேசில் திரும்பியது. 1970ல் 4 கோல் அடித்து பிரேசில் 3வது முறையாக கோப்பை வெல்ல உதவினார். 1972 ல் பிரேசில் அரசு, பீலேவை தேசிய பொக்கிஷமாக அறிவித்தது. 1973 ல் சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்றார். 1974 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என பிரேசில் அரசு தரப்பில் நெருக்கடி தரப்பட்டது.தனது முடிவில் உறுதியாக இருந்த பீலே, 1975ல் நியூயார்க் காஸ்மோஸ் அணியில் இணைந்தார். 1977ல் கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
உடல்நிலை பாதிப்பு
பீலேவுக்கு 2021ல் பெருங்குடலின் வலது பக்கத்தில் ‘கேன்சர்’ கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. இது ‘ஆப்பரேஷன்’ செய்து அகற்றப்பட்டது. அடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார். 2022, நவ. 29ல் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
‘கேன்சர்’ தொல்லை
அப்போது ‘கேன்சர்’ முற்றிய நிலையை அடைந்தது தெரியவர, ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட்டது. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் தொல்லை தர, தொடர்ந்து சிகிச்சை எடுத்தார். ‘கேன்சர்’ பாதிப்பு அதிகரித்து, சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் காலமானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement