நாக்பூர்: “ஆதித்ய தாக்ரே மீது மட்டும் இல்லை, முன்னாள் முதல்வரான அவரது அப்பா உத்தவ் தாக்ரே மீது கூட பயம் கிடையாது” என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 32 வயது இளைஞனுக்கு மகாராஷ்டிரா அரசு பயப்படுவதாக ஆதித்ய தாக்கரே கூறியதற்கு பதிலடியாக அம்மாநில துணை முதல்வர் வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,” எங்களுக்கு அவருடைய அப்பா உத்தவ் தாக்கரே மீதும் பயம் கிடையாது. நாங்கள் அவர்களிடமிருந்தே 50 எம்எல்ஏக்களை எடுத்து புதிய அரசை மகாராஷ்டிராவில் உருவாக்கி உள்ளோம். அப்போது அவர்கள் மும்பையே பற்றி எரியும் என்றார்கள். ஆனால் ஒரு தீக்குச்சி கூட ஏரியவில்லை” என்று கூறினார்.
முன்னதாக துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் திஷா சலியன் வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணை செய்யும் என்று அறிவித்தார். திஷா சலியன் வழக்கில் சிவசேனா எம்எல்ஏ ஆதித்ய தாக்கரேவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் பலர் கோரி வருகின்றனர்.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஆதித்ய தாக்கரே, “அரசியல் இவ்வளவு மலிவானதாக மாறிப் போய் நான் பார்த்தது இல்லை. முதல்வர் மீதான என்ஐடி ஊழலை திசை திருப்புவதற்காக இவ்வாறு எல்லாம் செய்யப்படுகின்றன. ஒரு 32 வயது இளைஞனைப் பார்த்து இந்த அரசாங்கம் பயப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.