உதகை: தமிழகத்தில் உதகை, திருவள்ளூர், செய்யாறு மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் நிலவிய கடும் பனி மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைத்தனர். உதகை அருகே உள்ள தலைகுந்தா, எச்.பி.எப், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை கடும் உறைபனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் புல்தரைகள் மீதும் வாகனங்கள் மீதும் பனி உறைந்து படர்ந்திருந்தன. இதனால் குறைந்த பட்ச வெப்பநிலையாக இன்று காலை உதகை நகர்பகுதியில் 3டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் ரயில் நிலையங்களில் பயணிகள் அவதிப்பட்டனர். மனமாலன் நகர், கடம்பத்தோர், பேரம்பாக்கம், மப்பேடு, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணிக்கு மேலாகவும் கடும் பனி பொழிவால் மக்கள் சிரமமடைந்தனர். சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் நிலவியதால் காலை வேலைக்கு செல்ல கூடியவர்கள் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் எதிராய் வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். செய்யாறு மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் அதிகாலை முதலே மூடுபனியால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர் இந்த நிலையில் கடும் பனிபொழிவால் 14 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது.