"உலகம் முழுவதும் கால்பந்து பரவியதற்குக் காரணமே பீலேதான்!"- சென்னையில் நெகிழ்ச்சியான இரங்கல் கூட்டம்

கால்பந்தின் கடவுள், பிளாக் பியர்ஸ், தி லெஜன்ட் என்றெல்லாம் பல சிறப்புப் பெயர்களை வைத்து மக்களால் கொண்டாடப்பட்ட சிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மற்றும் பிரேசிலின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் பீலே கடந்த டிசம்பர் 29 இயற்கை எய்தினார். அவரின் மறைவு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. பீலேவிற்காக பலதரப்பினரும் உருக்கமாக தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பீலே

இந்நிலையில், பீலேவிற்காக சென்னை ஹாரிங்டன் ஃபுட்பால் அகாடமி மற்றும் சென்னை ஃபுட்பால் பிளேயர்ஸ் அன்ட் பேன்ஸ் கிளப் சார்பாக இன்று காலை செனாய் நகர் திரு.வி.க பள்ளி மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கால்பந்தாட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தனர்.

“இந்தத் தலைமுறையில் கால்பந்து ஆடிக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு கூட பீலே என்றால் யார் என்று தெரிகிறது. அந்தளவுக்கு கால்பந்து உலகில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 1950-60 களில் இவருக்குப் போட்டியாக் யாருமே இல்லை. உலகம் முழுவதும் கால்பந்து விளையாடப்படுகிறது என்றால் அதற்கு பீலேதான் முன்னோடி. பலரும் அவருடைய ஆட்டத்தை பார்த்துதான் கால்பந்து ரசிகர்களாக மாறியிருப்பார்கள். கால்பந்து வரலாற்றையே பீலே-க்கு முந்தைய மற்றும் பிந்தைய என்று பிரித்துப் பார்க்கலாம்.

இன்றைய தலைமுறை ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களால் கூட அவருடைய சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. பீலே அடித்த அந்த சிசர் கிக்ஸ், புல்லட் கூட் மற்றும் ப்ரி கிக் போன்றவையெல்லாம் அத்தனை அழகாக இருக்கும். இன்னும் கூட அவருடைய வீடியோக்களைப் பார்க்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. பல கால்பந்தாட்ட வீரர்களுக்கு பீலே ஒரு மாபெரும் ஊக்க சக்தியாக திகழ்கிறார். இனியும் திகழ்வார்” என்கிறார் கால்பந்தாட்ட வீரரான லலித் குமார்.

பீலே இரங்கல் கூட்டம்

“பீலே தற்போது மறைந்து விட்டார். ஆனால் இவர் எப்போதும் ஃபுட்பால் ரசிகர்கள் மத்தியில் என்றுமே நினைவில் இருப்பார். மூன்றுமுறை ஃபிஃபா உலகக் கோப்பை வென்றவர். பீலேவுக்கு முன்னும் சரி, பின்னும் சரி யாரும் இவ்ளோ உலகக்கோப்பைகளை ஜெயிச்சதே இல்ல. இதெல்லாம் ஒரு மாயாஜாலம் மாதிரி இருக்கு. ஏழைகளாலயும் வாழ்க்கைல பெருசா சாதிக்க முடியும் என்பதற்கு பீலே ஒரு மிகப்பெரிய உதாரணம். அவருடைய ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்கிறார் சி.என் மூர்த்தி ஃபுட்பால் அகாடமி தலைவர் கேலக்ஸி மோகன்.

“சி.என் மூர்த்தி ஃபுட்பால் அகாடமி மற்றும் சென்னை ஃபுட்பால் பிளேயர்ஸ் அன்ட் பேன்ஸ் கிளப் சார்பாக இன்றைய தலைமுறை சிறுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மூலம் இன்று பீலே-விற்கான நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று ஃபுட்பால் விளையாடுபவர்களுக்கு ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்றவர்களை அறிந்து வைத்திருக்கும் இந்தத் தலைமுறை, ஆகச்சிறந்த வீரரான பீலேவையும் அறிய வேண்டும். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எக்கச்சக்கமான பாடங்கள் இருக்கின்றன” என்கிறார் சென்னை ஃபுட்பால் பிளேயர்ஸ் அன்ட் பேன்ஸ் கிளப் தலைவர் யுவராஜ்.

பீலே இரங்கல் கூட்டம்

மேலும் பல முன்னாள், இந்நாள் கால்பந்தாட்ட வீரர்களும் கால்பந்து ரசிகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பீலேவிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்துச் சென்றனர். நிகழ்ச்சி மொத்தமும் பீலேவின் நினைவுகளாலும் நெகிழ்ச்சியாலும் நிரம்பியிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.