எச்சரிக்கைகளுக்கு நடுவே 2023…

2022-ம் ஆண்டு முடிந்துவிட்டது. 2020, 2021-ம் ஆண்டுகளில் நமக்கிருந்த கோவிட் தொற்றுநோய் குறித்த பயம் எதுவும், 2022-ல் இல்லை. தொழில்கள் நன்கு வளர்ச்சி கண்டன. வேலைவாய்ப்பு பெருகியதால், நடுத்தர மக்களின் வருமானமும் உயர்ந்து, ஏறக்குறைய எல்லாத் தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கழித்து முடித்துள்ளனர்.

இதோ, 2023 எனும் புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டு, ரோஜாக்கள் தூவப்பட்ட மலர்ப்பாதையாக இருக்காது என்பதற்கான பல எச்சரிக்கைகள் 2022-லேயே தெரிய ஆரம்பித்துவிட்டன. சீனா, ஜப்பானில் மீண்டும் தலையெடுத்து வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது கோவிட்-19 புதிய தொற்றுக் கிருமி. இதன் விளைவு, சில மாதங்களுக்கு மட்டுமே இருக்குமா அல்லது ஆண்டு முழுக்கவே இருந்து மக்களை அவதிப்படுத்துமா என்பது முக்கியமான கேள்வி. இந்தப் புதிய வகை கிருமியைக் காரணம் காட்டி, மீண்டும் ஊரடங்குச் சட்டம் கொண்டுவரக் கூடாது என்பதே அனைவரின் முக்கியமான வேண்டுகோள். காரணம், இன்னொரு முறை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், சிறிய அளவில் வணிகம் செய்பவர்கள் மட்டுமல்ல, பெரிய அளவிலான தொழில் செய்பவர்களும் துவண்டுவிடுவார்கள் என்பதுதான்!

2022-ல் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுக்க உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தின. நமது ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. இதனால் தொழில்துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்படும். அதன் வளர்ச்சி குறைவதால், வேலைவாய்ப்பு குறைந்து, மக்களின் வருமானமும் குறையும். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவே கணிக்கின்றனர் உலகளாவிய பொருளாதார நிபுணர்கள்.

பொருளாதார வளர்ச்சி பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற நிலையில், முதலீடு மட்டும் பெரிதும் லாபம் தரும் வகையில் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? 2022-ல் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான சென்செக்ஸ் வெறும் 5% மட்டுமே லாபம் தந்துள்ள நிலையில், 2023-ல் இந்த அளவுக்காவது லாபம் கிடைக்குமா என்கிற சந்தேகம் உண்டாகியிருக்கிறது. பங்குச் சந்தையில் 2020, 2021-ல் கிடைத்த லாபத்தைப் போல, இந்த 2023-ல் கிடைக்காது என்பதால், நமது முதலீட்டை சர்வ ஜாக்கிரதையாக மேற்கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியம்.

இப்படிப் பல எச்சரிக்கைகளுடன் நாம் இந்தப் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு துணிச்சலுடன் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வாழ்க்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலை வந்தாலும், அதைப் பார்த்து கலங்கிப்போய் நிற்கத் தேவையில்லை. புதிய சூழ்நிலையில் எது நடக்கும், எது நடக்காது என்பதைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட ஆரம்பித்தாலே, பெரும்பாலான தோல்விகளையும் நஷ்டங்களையும் மனவருத்தங்களையும் நம்மால் தவிர்த்துவிட முடியும்!

புத்தாண்டைத் துணிச்சலுடன் நாம் எதிர்கொள்வோம். எல்லாப் பிரச்னைகளையும் எச்சரிக்கையுடன் அணுகி, மாற்றி யோசித்து வெற்றி காண்போம்! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.