காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் ரேசான் பகுதியில் இளையமகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்தார்.
அப்பகுதியை சேர்ந்த கீர்த்திபென் என்பவர் கூறும்போது,”கடந்த 7 ஆண்டுகளாக ஹீராபென் இங்கு வசிக்கிறார். அவரை நாள்தோறும் சந்திப்போம். அவர் எளிமையாக வாழ்ந்தார். அனைவரிடமும் அன்பு செலுத்தினார். இந்த குடியிருப்பின் ராஜ மாதாவாக இருந்தார். எனது சொந்த தாயை இழந்தது போன்று உணர்கிறேன்’’ என்றார்.
ரேசான் பகுதியை சேர்ந்த ரமேஷ்பிரஜாபதி என்பவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் தாயார் என்றகர்வம் ஹீராபென்னுக்கு துளியும் கிடையாது. ஏழைகளோடு இனிமையாக பேசுவார், பழகுவார். மிகவும் எளிமையாக வாழ்ந்தார். அவரது உயிரிழப்பு, எங்கள் குடியிருப்புக்கு பேரிழப்பு’’ என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி குடும்பத்தினரின் பூர்விக கிராமமான வட்நகரில், ஹீராபென்னின் மறைவையொட்டி 3 நாட்கள் கடையடைப்பு நடத்தப்படுகிறது.
வட்நகரை சேர்ந்த ஹீராபென்னின் நெருங்கிய தோழி ஹிரபா என்பவர் கூறும்போது, இளம்வயது முதல் நானும் ஹீராபென்னும் ஒரே பகுதியில் வசித்து வந்தோம். நாங்கள் அக்கா, தங்கையாக பழகி வந்தோம். ஹீராபென்னின் மறைவால்வட்நகரம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஹீராபென்னின் மற்றொரு தோழி ஷகிராபா கூறும்போது, “நானும் ஹீராபென்னும் ஒன்றாக சந்தைக்கு சென்று காய்கனிகளை வாங்குவோம். யாரிடமும் சண்டைபோடமாட்டார். அன்பானவர். அவரது மறைவால் ஒட்டு மொத்தவட்நகரமும் சோகத்தில் ஆழ்ந் திருக்கிறது’’ என்றார்.