திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை இரவு திருப்பதிக்கு வந்தனர்.
முதலில் இவர்கள் திருப்பதி அலிபிரியில் உள்ள ‘கோ மந்திரம்’ கோயிலுக்கு சென்று கோ பூஜை செய்தனர். அதன்பின்னர், இரவு திருமலையில் தங்கினர். இதனை தொடர்ந்து நேற்று காலை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தம்பதியினர் கோயில் முகப்பு கோபுரம் வழியாக கோயிலுக்குள் சென்றனர். இவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத பண்டிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் ஏழுமலையானை வழிபட்ட ஆளுநருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் ஏழுமலையானின் திருவுருவப்படம், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.