கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலனு தெரியல – விரக்தியில் செல்வராகவன்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட். நீண்ட நாள்கள் படம் இயக்காமல் இருந்த சூழலில் தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும் லேட்டஸ்ட் ஆளவந்தானாக படம் உருவாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். அதுமட்டுமின்றி படத்தின் கதையிலும் எந்தவித புதுமையும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே செல்வராகவன் இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அப்படி அவர் பீஸ்ட், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களிலும் செல்வராகவனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது அவர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் செல்வராகவனின் நடிப்பை பெரிதும் பாராட்டினர்.

இப்படி இயக்கம், நடிப்பு என தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளும் செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். குறிப்பாக வாழ்க்கை சார்ந்த தத்துவங்களும், அவரது மோட்டிவேஷன் ட்வீட்களும் இணையதளவாசிகளிடம் வெகு பிரபலம்.

அந்தவகையில் அவர் தற்போது புதிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சில நாள்களுக்கு முன்பு அவர், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என ட்வீட் செய்திருந்தார். அவரது அந்த ட்வீட் சமூக வலைதளவாசிகளிடம் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.