அகமதாபாத்: குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநில நவ்சாரி மாவட்டத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பேருந்தில் சிலர் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து தேசிய நெடுஞ்சாலை 48ல் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டொயோட்டா ஃபார்ச்சுனர் காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 28 பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் தீவிரக் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. மாரடைப்பு ஏற்பட்ட வாகன ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஜனவரி 15ஆம் தேதியுடன் இந்நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இந்த விபத்து நடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.